திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம், 63 வேலம்பாளையம், இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
காரணம்பேட்டை அருகே உள்ள பெருமாள் கவுண்டம் பாளையத்தில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கல்குவாரியில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கல்குவாரியில் இருந்த அலுவலகம் மற்றும் ஊழியர்கள் தங்கும் அறை ஆகியவை இடிந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பல்லடம் காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தின் போது வெடித்து சிதறிய கற்கள் அருகில் இருந்த விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் விழுந்து வீடுகளில் சேதம் ஏற்பட்டது, கல் விழுந்து ஒரு விவசாயிக்கு காயம் ஏற்பட்டதில் அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்து பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு சிதறிக் கிடந்த பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி விடுமுறைக்காக தொழிலாளர்கள் ஊருக்குச் சென்று இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வெடித்தது சிலிண்டரா அல்லது கல் உடைக்கப் பயன்படும் வெடிபொருளா என்பது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடி விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.