நாமக்கலில் பரபரப்பு… நிதி நிறுவன உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!

நாமக்கலில் பரபரப்பு… நிதி நிறுவன உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்படை பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் தனது அலுவலகத்தில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டினார். இதையடுத்து வெட்டுக் காயத்துடன் கௌரிசங்கர் சாலை நோக்கி ஓடி வந்துள்ளார். அவரை துரத்தி வந்த மர்ம நபர் கௌரிசங்கரின் தலை, கை மற்றும் கால்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பலத்த காயமடைந்த கௌரிசங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

அதில், தாக்குதலுக்கு உள்ளான கௌரிசங்கர் ஏற்கெனவே ஒரு கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று திரும்பிய குற்றவாளி என்று தெரியவந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக வெட்டப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேபோல் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா என போலீஸார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in