அதிகரிக்கும் ஆசிட் வீச்சு: ஆன்லைன் விற்பனை காரணமா?

அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!
அதிகரிக்கும் ஆசிட் வீச்சு: ஆன்லைன் விற்பனை காரணமா?

டெல்லியில் நேற்று அரங்கேறிய, பள்ளி மாணவி மீதான அமில வீச்சின் பின்னணியில், ஆன்லைனில் அவை சகாயமாக கிடைக்கும் அதிர்ச்சி தகவல் வெளிப்பட்டிருக்கிறது.

டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் நேற்று(டிச.14) அமில வீச்சுக்கு ஆளானார். தலைநகரை உலுக்கிய இந்த சம்பவத்தில், நகரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமன்றி, தங்குதடையின்றி நடக்கும் அமில விற்பனையும் முக்கிய காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் அமில தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர். சச்சின் அரோரா, ஹர்ஷித் அகர்வால், வீரேந்திர சிங் ஆகிய 3 இளைஞர்களிடம், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் முழு விபரங்களும் தெரிய வந்திருக்கின்றன. இவர்களில் சச்சின் அரோரா கடந்த 3 மாதங்களாக பள்ளி மாணவியை தொந்தரவு செய்து வந்திருக்கிறான். அந்த சிறுமி முகம்கொடுத்து பேசாததில் கோபம் கொண்டவனாக, அமில வீச்சுக்கு நாள் குறித்திருக்கிறான்.

சம்பவத்தின்போது ஹர்ஷித் அகர்வால் பைக் ஓட்ட, பின்னால் அமர்ந்தபடி வந்த சச்சின், பாட்டிலில் வைத்திருந்த அமிலத்தை மாணவி முகத்தில் வீசியிருக்கிறான். முகத்தை மறைத்திருந்த இருவரும் உடனடியாக அங்கிருந்து விரைந்து மறைந்திருக்கின்றனர். மூன்றாம் நபரான வீரேந்திர சிங், சச்சினின் பைக் மற்றும் செல்ஃபோனுடன் நகரின் இன்னொரு மூலையில் இருந்திருக்கிறான்.

சிசிடிவி பதிவில் டெல்லி சம்பவம்
சிசிடிவி பதிவில் டெல்லி சம்பவம்

ஒருவேளை போலீஸ் விசாரணை சச்சினுக்கு எதிராக திரும்பினால், சம்பவ இடத்தில் அவன் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். இந்த மூன்று இளைஞர்களும் 19 - 21 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக ’ஃப்ளிப்கார்ட்’ மின் வணிகத்தின் மூலம் சச்சின் அமிலத்தை வரவழைத்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இதனை அடுத்து டெல்லி மகளிர் ஆணையம், அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட அமில விற்பனையை, காய்கறி போல எளிதாக இந்த நிறுவனங்கள் எப்படி விற்கலாம் என டெல்லி மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

2013-ல் நாட்டில் அமில விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உரிய உரிமம் பெற்றவர்கள் மட்டும், ஏக நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமிலம் விற்கலாம். அமிலம் வாங்க வருவோர் உரிய காரணத்தை விளக்கியும், அடையாள ஆவணங்களை சமர்பித்தும் மட்டுமே அமிலம் வாங்க முடியும். ஆனால் இந்த கட்டுப்பாடுகளுக்கு மாறாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் எளிதில் அமிலத்தை விற்பனை செய்திருக்கின்றன. எனவே காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் உள்ளிட்ட விசாரணைகளுக்கு அவை தற்போது ஆளாகி இருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in