மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம்... ஆன்லைன் செயலி மூலம் பல கோடி மோசடி.. கதறும் பொதுமக்கள்!

மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம்... ஆன்லைன் செயலி மூலம் பல கோடி மோசடி.. கதறும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இழந்த பொதுமக்கள் பணத்தை மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கடந்த சில நாட்களாக கிராஸ் வேர்ல்ட் என்ற இணைய ஆப் மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி பணம் கிடைக்கும் என்னும் விளம்பரம் காட்டுத்தீ போல் பரவியது. விளம்பரத்தில் அந்த செயலியில் 600 ரூபாய் முதலீடு செய்தால் முதல் நாள் 24 ரூபாய் வட்டியும், அடுத்த 10 நாட்களுக்கு 240 ரூபாய், 30 நாட்களுக்கு 740 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக 36 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.2.5 லட்சம் கிடைக்கும் எனவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் என சுமார் 5,000 - க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் செயலியில் முதலீடு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஆன்லைன் செயலி சரி வர இயங்காததால் பணத்தை முதலீடு செய்த நபர்கள் தாங்கள் ஏமாந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால், தாங்கள் ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்த பணத்தை மீட்டத்தரக் கோரி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்படியும், ஆன்லைன் செயலிகளில் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என்றும், ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலியில் முதலீடு செய்துள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in