
கன்னியாகுமரி அருகே உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை தாய் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரையுமன்துறை பகுதியை சேர்ந்த சீனு (28) - பிரபுஷா (23) தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நட்சன் ராய் (3), அரிஸ்டோ பியூலன் (1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரபுஷாவுக்கும், காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த முகமது சதாம் உசேன் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தெரிய வந்ததால் 8 மாதங்களுக்கு கணவன், அவரைவிட்டு பிரிந்தார். கணவனிடம் மூத்த குழந்தையும், பிரபுஷாவிடம் 2-வது குழந்தை அரிஸ்டோ பியூலனும் இருந்தனர். பிரபுஷா, முகமது சதாம் உசேனுடன் தூத்துக்குடியில் குடியேறினார்.
இந்நிலையில், குழந்தைக்கு திடீரென உடல் நிலை சரியில்லை எனக்கூறி கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போலீஸார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுஷா, முகமது சதாம் உசேன் ஆகியோரை அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை அரிஸ்டோ பியூலனை இருவரும் மது கொடுத்து அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த போலீஸார் பிரபுஷா, முகமது சதாம் உசேன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
முகமது சதாம் உசேன், ஏற்கனவே நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து சில ஆண்டுகள் குடும்பம் நடத்தி உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண்ணை பிரிந்த முகமது சதாம் உசேன், பின்னர் திங்கள் சந்தையை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அவரையும் பிரிந்துள்ளார்.