பெண்கள் சப்ளை செய்யப்படும் என முகநூலில் பதிவு: 8 மாதங்களுக்கு பிறகு சிக்கிய சென்னை வாலிபர்

கைதானவர்
கைதானவர்

பெண்ணின் பெயரில் முகநூலில் போலி கணக்கு ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த சென்னையைச் சேர்ந்தவரை மதுரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மதுரை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடைய பேரில் யாரோ முகநூலில் போலியான கணக்கு தொடங்கி அதன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், மிகக் குறைந்த விலையில் தமிழகம் முழுவதும் பெண்கள் சப்ளை செய்யப்படும் என்றும் அந்த முகநூல் கணக்கில் பதிவு செய்ததாகவும், தன்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வார்த்தைகளால் திட்டி, பாலியல் தொந்தரவு தந்து, கொலை மிரட்டல் விடுத்து தொடர்ந்து தன்னை தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறி இருந்தார்‌.

இது தொடர்பாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சார்மிங் எஸ் ஒய்ஸ்லின் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், இதில் தொடர்புடைய சென்னை ஆவடியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மகன் குமார் என்பவரை நேற்று காவல் துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், பொதுமக்கள் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தைரியமாக காவல் துறையில் புகார் செய்யலாம் என்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in