இரவு 10 மணி... நண்பர்கள் கண்முன்னே வாலிபருக்கு நடந்த பயங்கரம்

இரவு 10 மணி... நண்பர்கள் கண்முன்னே வாலிபருக்கு நடந்த பயங்கரம்
ஜீவா

இரவு 10 மணிக்கு மேல் மது வாங்கச் சென்றவர் சட்டவிரோத மது விற்பனையாளருடன் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் மணி, விக்னேஷ், பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில் உள்ள பஜனைமட தெருவிற்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.

அப்போது இரவு பத்துமணியை தாண்டிவிட்டதால் மதுக்கடை மூடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த கடைக்கு அருகிலேயே அவையாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த தமிழ்மணி என்பவர் சட்டவிரோதமாக ‌மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவா மற்றும் அவரது நண்பர்கள் தமிழ்மணியிடம் மது கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவை வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஜீவா அந்த இடத்திலேயே சாய்ந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் படுகாயமடைந்த ஜீவாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜீவா ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்மணியை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories

No stories found.