பீகாரில் தேர்தலுக்கு பின் பயங்கர வன்முறை: ஒருவர் கொலை, 3 பேர் படுகாயம்

பீகாரில் வன்முறை
பீகாரில் வன்முறை
Updated on
1 min read

பீகாரின் சரண் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 3 பேர் படுகாயமடைந்தனர். வன்முறை காரணமாக அம்மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

5ம் கட்ட மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சரண் மக்களவைத் தொகுதியில் மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி) வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் எம்.பி- ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகிறார்.

சரண் மாவட்டத்தில் பாஜக - ஆர்ஜேடி தொண்டர்களிடையே மோதல்
சரண் மாவட்டத்தில் பாஜக - ஆர்ஜேடி தொண்டர்களிடையே மோதல்

நேற்று தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று காலை, சரண் தொகுதிக்கு உள்பட்ட பிகாரி தாக்கூர் சௌக் அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் வன்முறை ஏற்பட்டது. வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக பாஜக மற்றும் ஆர்ஜேடி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்லா கூறியுள்ளார்.

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், வன்முறையில் காயமடைந்த கட்சித் தொண்டர்களைச் சந்திக்க சரண் தொகுதியின் ஆர்ஜேடி வேட்பாளர் ரோகினி ஆச்சார்யா பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (PMCH) சென்றார்.

தேர்தலுக்கு மறுநாள் வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in