திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயம் அடைந்து முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (74). இவர் கடந்த 18-ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மாடு ஒன்று திடீரென அவரை முட்டி தூக்கி வீசியது.
இதனால் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து முதியவரை அப்பகுதி மக்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஐஸ் அவுஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சுந்தரம் நேற்று உயிரிழந்தார். அவர் மாற்றுத்திறனாளி ஆவார். சென்னை முழுவதும் சாலையில் செல்வோரை மாடுகள் முட்டும் சம்பவம் தொடர்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அரும்பாக்கத்தில் தன் அம்மாவுடன் நடந்து சென்ற சிறுமியை மாடு முட்டியது. அண்மையில் பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது.
அதே போல் திருவல்லிக்கேணியில் கடந்த 10 நாட்களில் 3 பேரை மாடுகள் முட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாடு முட்டிய சம்பவத்தால் ஒருவரின் உயிர் பறிபோய் உள்ளது. எனவே, சென்னையில் தெருவில் மாடுகள் திரிவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.