பாவாத்தாள்
பாவாத்தாள்

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Published on

மருமகள் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதால் தன்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டுமென, மூதாட்டி ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வேதம்பாளையம் பாப்பங்காட்டு தோட்ட பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பாவாத்தாள் (84). இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நேற்று மனு ஒன்றை அளித்தார்.

அதில், ”எனது கணவர் 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார். எனது மகள் அவரது கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். மகன், மருமகள் பராமரிப்பில் இருந்து வருகிறேன். எனது கணவருக்குச் சொந்தமான சொத்துக்களை மருமகள் தான் பார்த்துக் கொண்டார்.

கருணை கொலை செய்யக்கோரி மனு அளித்த மூதாட்டி
கருணை கொலை செய்யக்கோரி மனு அளித்த மூதாட்டி

என் மகனுக்கும் செலவுக்கு பணம் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். மருமகளும், அவரது அண்ணன், மற்றொரு நபர் என மூன்று பேரும் சேர்ந்து என்னைத் தாக்கினர். சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி மிரட்டினர். கையெழுத்து போடவில்லை என்றால், கிணற்றில் குதிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றனர்.

மருமகள் கொடுமையால் உணவு கிடைக்காமல் தவிக்கிறேன். எனவே, என்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் அல்லது நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.” என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in