விடுதியில் தூக்குபோட்டு நர்சிங் மாணவி தற்கொலை; பெற்றோர் போராட்டம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு

விடுதியில் தூக்குபோட்டு நர்சிங் மாணவி தற்கொலை; பெற்றோர் போராட்டம்: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது வழக்கு

திருவள்ளூர் நர்சிங் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. விடுதியுடன் இயங்கும் இந்தக் கல்லூரியில் மேல் தளத்தில் விடுதியும், கீழ்த் தளத்தில் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுமதி(19) என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். நேற்று காலை வகுப்பிற்கு சென்ற மாணவி மதிய உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது தோழிகளை வகுப்பிற்கு அனுப்பிவிட்டு தனது அறைக்குள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உள்ளே சென்று சுமதியை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்து போன சுமதி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரி வளாகத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மாணவியின் பெற்றோர், கல்லூரி மாணவிகள், கல்லூரி நிர்வாகம் ஆகியோரிடம் வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவியின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in