2 மனைவி, ஆடம்பர ஓட்டல், பங்களாக்கள்... இந்தியா முழுவதும் சொத்து வாங்கிக் குவித்த கொள்ளையன்!

மனோஜ் சௌபே
மனோஜ் சௌபே

இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு மனைவிகளுக்கு ஆடம்பர பங்களாக்களைக் கட்டிக் கொடுத்ததுடன், நாடு முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சித்தார்த் நகரைச் சேர்ந்தவர் மனோஜ் சௌபே(48). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். ஒருவர் லக்னோவிலும், மற்றொருவர் டெல்லியிலும் வசிக்கின்றனர்.

இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனான மனோஜ் சௌபே கொள்ளையடித்த பணத்தில் நாடு முழுவதும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். பல்வேறு முறை கைது செய்யப்பட்ட சௌபே,போலீஸ் காவலில் இருந்து தப்பிப்பது வாடிக்கையாகவே இருந்துள்ளது.

டெல்லி மாடர்ன் டவுனில் நடந்த கொள்ளையில் சௌபே ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பிடிக்க வடமேற்கு டெல்லியின் துணை ஆணையர் ஜிதேந்திரகுமார் மீனா உத்தரவிட்டார்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு நடத்திய போது, ஸ்கூட்டரில் சௌபே பயணம் செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த ஸ்கூட்டருக்குச் சொந்தமான நேபாளத்தைச் சேர்ந்த வினோத் தாபாவைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர் சௌபேவின் மைத்துனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வைத்து சௌபேயை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ்

இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தியா முழுவதும் சௌபே மீது 200-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. ஆடம்பரமான பங்களாக்களைக் குறிவைத்தே சௌபே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். 1997-ம் ஆண்டு டெல்லியில் உள்ள கேன்டீனில் கொள்ளையடிக்கும் போது பிடிபட்டார். டெல்லி போலீஸார்இதுவரையில் 9 முறை சௌபேயை கைது செய்துள்ளனர். ஆனால், பலமுறை போலீஸ் பிடியில் இருந்து அவர் தப்பியுள்ளார்.

சௌபேவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும், அவர் கொள்ளையர் என்பது அவர்களுக்குத் தெரியாது. கொள்ளையடித்த பணத்தில் நேபாளத்தில் ஆடம்பர ஓட்டலைக் கட்டியுள்ளார். இந்தியாவில் பல இடங்களில் பங்களாக்களாக சொத்துக்களை அவரது பெயரில் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் தனது மனைவி ஒருவருக்கு மாளிகையைப் பரிசளித்துள்ளார். அத்துடன் உத்தரப் பிரதேசத்தில் பெரிய அளவில் நிலத்தை வாங்கி அதை மருத்துவமனை ஒன்றுக்கு மாதம் 2 லட்ச ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளார். லக்னோவிலும் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. டெல்லியில் உள்ள பல காவல் நிலையங்களில சௌபே மீது 15 வழக்குகள் உள்ளன" என்றார்.

நாடு முழுவதும் 200-க்கும் கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் பிடிபட்ட சம்பவம் டெல்லி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in