இரிடியம் மோசடியில் மூளையாகச் செயல்பட்டாரா என்எல்சி அதிகாரி?

இரிடியம் மோசடியில் மூளையாகச் செயல்பட்டாரா என்எல்சி அதிகாரி?
மாதிரிப் படம்

வியாபாரியிடம் இரிடியம் மோசடி செய்து 4.5 லட்சத்தை அபரித்த நெய்வேலி என்எல்சி நிறுவன அதிகாரியை போலீஸார் கைதுசெய்தனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ஜாகீர். தொழில் அதிபரான இவரும், அதேபகுதியைச் சேர்ந்த இவரது நண்பருக்கும் புலவன் குப்பம் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. அப்போது உலகநாதன் ஜாகீரிடம் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் 4.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதைத் தருவதாகவும் ஆசைவார்த்தைக் கூறினார். இதை நம்பி ஜாகீர் தன்னிடம் இருந்த 4.5 லட்சம் பணத்தை உலகநாதனிடம் கொடுத்தார். இந்நிலையில், ஏப்ரல் 9 (நேற்று) நள்ளிரவு பண்ருட்டிக்கு வந்து இரிடியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு வந்தது. இதனால் ஜாகீர், பண்ருட்டிக்குப் போனார். அப்போது மேலும் ஒரு லட்சம் கொடுத்தால்தான் இரிடியம் தருவதாக உலகநாதன் கூறியுள்ளார்.

இதனால் உலகநாதனுக்கும், ஜாகீருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதில் காயம் அடைந்த உலகநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையில் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உலகநாதன், அவரது நண்பர் நெய்வேலி என்எல்சி அதிகாரி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கும்பல்தான் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து என்எல்சி அதிகாரி பாலசுப்பிரமணியன், உலகநாதன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் கேட்டபோது, “இந்தச் சம்பவத்தில் ‘சதுரங்கவேட்டை’ திரைப்படப் பாணியில் என்எல்சி அதிகாரியே மூளையாக இருந்து செயல்பட்டு உள்ளார். இதேபோல், ‘இரிடியம்’ என்று ஒரு படமே வந்தது. ஆனாலும் மக்களுக்கு இதைப் பற்றியெல்லாம் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இப்படி தவறுகள் அரங்கேறிவருகின்றன” என்றனர்.

Related Stories

No stories found.