கோத்தகிரி மலைப்பாதையில் அதிர்ச்சி... காரை துவம்சம் செய்த யானை... பதற வைக்கும் வீடியோ

கோத்தகிரி மலைப்பாதையில் அதிர்ச்சி... காரை துவம்சம் செய்த யானை... பதற வைக்கும் வீடியோ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை வழிமறித்த காட்டு யானை காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்திருந்தனர். இதனால் ஏராளமான வாகனங்கள் மலைப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வாகனங்கள் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்தது.

சாலையின் நடுவே நின்றிருந்த யானையை கடந்து செல்ல லாரி மற்றும் பேருந்து ஆகியவை முயற்சித்த போது யானை ஆக்ரோஷமாக வாகனங்களை தாக்க துவங்கியது. இதில் லாரி மற்றும் பேருந்தின் கண்ணாடி உடைந்து சிதறியது.

இதனிடையே சிவக்குமார் என்பவரது வாடகை கார் அவ்வழியே வந்தபோது யானையைக் கண்டு அவர் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆக்ரோஷமடைந்த யானை காரை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியது. நல்வாய்ப்பாக அதிலிருந்த பயணிகள் இருவர் இறங்கி தப்பினர்.

இதையடுத்து அந்த காரின் கதவுகளை தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்திய யானை பின்னர் காரையும் முட்டி தள்ளியது. இந்த காட்சிகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். நீண்ட நேரம் ஆக்ரோஷத்துடன் நின்றிருந்த காட்டு யானை பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதையடுத்து வனத்துறையினரும் போலீஸாரும் தகவலறிந்து வந்து, வாகன போக்குவரத்தை சீர்படுத்தினர். மலைப்பாதைகளில் செல்லும்போது யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் எதிர்பட்டால் அவற்றை கோபப்படுத்தும் வகையிலோ அல்லது தொந்தரவுபடுத்தும் வகையிலோ எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் மிதமான வேகத்தில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். யானை காரை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in