ஹவாலா நிதியில் தீவிரவாதம்: தாவூத் இப்ராஹிம் வகையறாவை வளைக்கும் என்ஐஏ

தலைவர்களை தாக்க தனி அலகு
ஹவாலா நிதியில் தீவிரவாதம்: தாவூத் இப்ராஹிம் வகையறாவை வளைக்கும் என்ஐஏ

இந்தியாவின் பெருநகரங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற ஹவாலா உபாயத்தை தீவிரமாக கையாள்வதாக, பாகிஸ்தானில் இருந்தபடி மும்பை நிழலுலகை இயக்கும் தாவூத் இப்ராஹிம் மீது என்ஐஏ குறிவைத்துள்ளது.

1993 மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான தனது நிழலுலக நடவடிக்கைகளை புதுப்பித்திருப்பதாக என்ஐஏ கண்டறிந்துள்ளது. தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் இல்லாதபோதும், ’டி-கம்பெனி’ என்ற பெயரில் அவனது ஆட்களே மும்பை மாநகரின் நிழலுக வர்த்தகம் முதல் திரைத்துறை வரை ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பெருவர்த்தக நிறுவனங்கள் எவரிடம் கப்பம் கட்ட வேண்டும், சினிமா நட்சத்திரங்கள் யாருக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பது உட்பட சகலத்தையும் வளைகுடா தேசங்களில் இருந்தபடி தாவூத் செயல்படுத்தி வந்தான்.

அதன் பின்னர் வயது முதிர்வு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அடைக்கலமான தாவூத் மும்பை ஆதிக்கத்தின் தீவிரத்தை குறைத்துக் கொண்டான். இடையில் நிழலுக மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சில மும்பை தாதாக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாவூத் இப்ராஹிம் மீண்டும் தனது இந்திய தொடர்புகளை புதுப்பித்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ வசம்விசாரணை ஒப்படைக்கப்பட்டதும் புதிய தகவல்கள் வெளியாயின.

அதன்படி மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் தாவூத் வகையறா அதற்கான நிதியை வளைகுடா நாடுகள் வழியே மும்பைக்கு அனுப்பி வருகிறது. நாட்டின் முக்கிய அரசியல் மற்றும் வர்த்தக புள்ளிகளை குறிவைத்து தாக்க திட்டமிட்டிருப்பதுடன், அதற்காக தனி அலகு ஒன்றை உருவாக்கி இருப்பதையும் என்ஐஏ கண்டறிந்துள்ளது. மேலும் அணியில் ஆளெடுக்கவும், இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனையை பயிற்றுவிக்கவும் சிறப்பு ஏற்பாடுகளையும் தாவூத் இப்ராஹிம் செயல்படுத்தி வந்திருக்கிறான்.

தாவூத் இப்ராஹிம், அவனது கூட்டாளியான சோட்டா சகீல் மற்றும் இதர மூவருக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் என்ஐஏ, மும்பையில் மறைந்திருக்கும் இதர தாவூத் தொடர்பாளர்களை தேடி வருகிறது. தாவூத் கூட்டாளிகள் குறித்து ரகசிய தகவல் தருவோருக்கு லட்சங்களில் வெகுமதியையும் அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு தீவிரவாத சிந்தனைகளை பயிற்றுவிக்கும் நோக்கத்துக்காக முற்றிலும் புதிய வலைப்பின்னலை தாவூத் தொடங்கியிருப்பதால் அவர்களை மோப்பமிடுவதில் தாமதமாகி வருகிறது. தற்போதைக்கு துபாய் வாயிலாக மும்பைக்கு நீளும் ஹவாலா பணப்பரிமாற்ற கண்ணிகளை முறித்திருக்கும் என்ஐஏ, டி-கம்பெனியின் இதர இந்திய தொடர்புகளையும் தீவிரமாக தோண்டி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in