துப்பாக்கி கலாச்சாரத்துக்கு 140 உயிர்கள் பலி; 6 மாதத்தில் அதிகரித்த அமெரிக்க சோகம்

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில், அண்மையில் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில், அண்மையில் அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை

அமெரிக்காவின் விசித்திர சாதனையாக கடந்த 6 மாதங்களில் அரங்கேறிய வெகுஜனங்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 140 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்க வரலாற்றில் திடீரென அதிகரித்திருக்கும் இந்த பலி எண்ணிக்கை, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் தற்காப்பு என்ற பெயரில் ஆளாளுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதும், அவற்றை காய்கறி போல கடைகளில் வாங்குவதும் எளிது. முறையற்ற நபர்களின் கைகளில் இந்த நவீன துப்பாக்கிகள் கிடைக்கும்போது, பொதுமக்களின் உயிர்கள் அநியாயமாக பலியாவதும் நடக்கின்றன.

அதிலும், பள்ளிகளில் புகுந்து குழந்தைகளை குறிவைத்து சக மாணவரோ, சமூக விரோதியோ துப்பாக்கிச் சூடு நடத்துவது அதிகரித்துள்ளது. திரைப்படங்கள், வீடியோ கேம் ஆகியவற்றின் வாயிலாக குழந்தைகளின் மனதை ஆக்கிரமித்திருக்கும் துப்பாக்கி கலாச்சாரமும், அவர்களை துப்பாக்கி ஏந்தச் செய்கிறது. இந்த வகையில், பெரியவர்களின் துப்பாக்கி சிறுவர்கள் கையில் சிக்கும்போது விபரீதங்கள் நடந்தேறுகின்றன.

துப்பாக்கி விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் பொதுமக்களில் ஒரு சாரார் மத்தியில் இதற்கு எதிர்ப்பு நீடிப்பதால், சட்டப்படியான நடவடிக்கைகளை கொண்டுவருவதில் இழுபறி நீடிக்கிறது. நடப்பு ஆண்டின் ஜனவரி 1 தொடங்கி ஜூன் 30 வரையிலான 6 மாதங்களில், இம்மாதிரி வெகுஜனங்கள் மத்தியிலான 28 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 140 பேர் பலியாகி இருப்பது, புதிய அமெரிக்க அவலத்தை உணர்த்துகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிர்ப் பலி நிகழ்ந்தவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. உயிர்ப்பலி அல்லாத துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தனி.

முந்தைய ஆறு மாத கணக்கோடு ஒப்பிடுகையில் தற்போதைய பலிகள் வெகுவாக கூடியிருக்கின்றன. 2022ம் ஆண்டின் இரண்டாம் பாதியான ஆறு மாதங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு 27 பேர் மட்டுமே இறந்துள்ளனர். மாறாக கடந்த ஆறு மாதங்களின் வெகுஜன துப்பாக்கி பிரயேகங்களும், பலியானோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருப்பது அங்கே துப்பாக்கி புழக்கத்துக்கு எதிராக கடுமையான சட்டங்களை வலியுறுத்துகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in