குழந்தை பிறக்காது எனக்கடிதம் எழுதி வைத்து விட்டு புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

குழந்தை பிறக்காது எனக்கடிதம் எழுதி  வைத்து விட்டு புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

குழந்தை பிறக்கச் சாத்தியம் இல்லை என மனமுடைந்த புதுமணத் தம்பதியினர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(22). இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் தங்கி பழைய இரும்பு மற்றும் பாத்திரங்களை வாங்கி விற்கும் கடையை நடத்தி வந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அவர்கள் மதுரவாயலில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். புதுமணத் தம்பதி என்பதால் இருவர் வீட்டிலிருந்தும் நலம் விசாரிப்பதற்காகத் தினமும் செல்போன் அழைப்புகள் வரும். வழக்கம் போல இன்று காலை அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. நீண்ட நேரம் ஆகியும் இருவரும் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்துள்ளனர். அவர்களின் வீடு பூட்டிய நிலையிலேயே இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவைத் தட்டினார்கள். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் மதுரவாயல் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த மதுரவாயல் காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இருவரது உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர்களின் உடல்களை அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் அந்த வீட்டைச் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பாக அவர்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. ஆண்மை குறைபாடு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டிருந்தது.

மருத்துவர்களைச் சந்தித்து இதை உறுதிப்படுத்திய பிறகு மனமுடைந்து தற்கொலை செய்தார்களா அல்லது தாமாகவே இந்த முடிவுக்கு வந்தார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்றைய நவீன உலகத்தில் குழந்தை பெற்று கொள்வதற்கு எத்தனையோ நவீன சிகிச்சைகள் வந்துள்ள நிலையில் புதுமணத்தம்பதிகள் தற்கொலை முடிவு எடுத்தது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in