
நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அரசின் பேருந்தில் இலவச பேருந்து பயண அட்டை மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
வழக்கமாக பள்ளி முடிந்து நெல்லை நகர் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளுக்கு செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறுவதற்காக பள்ளி முன்பு கூட்டமாக மாணவர்கள் நிற்பது வழக்கம். அங்கு மாணவர்களை ஒழுங்குபடுத்தி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக பள்ளி சார்பில் இரண்டு ஆசிரியர்களும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து முக்கூடல் நோக்கி சென்ற நேற்று பேருந்து, ஸ்ரீபுரம் டவுன் சாலையில் உள்ள பள்ளி அருகே வந்தது. அப்போது, பள்ளி முன்பு அதிகமான மாணவர்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்த பேருந்தின் ஓட்டுநர் முருகன் மாணவர்கள் ஓடி வருவதை கண்டும் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார்.
இதைக்கண்ட மாணவர்கள் வேகமாக, பேருந்தை நோக்கி முண்டியடித்துக் கொண்டு கூட்டமாக ஓடி ஏறினர். அப்போதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டினார். இதில் படியில் ஏற முயன்ற மாணவர்கள் சிலர் கால் இடறி கீழே விழுந்தனர். இதில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மேலும், வாகனங்கள் அதிகம் வரக்கூடிய மிக முக்கிய சாலையில் பேருந்தில் இடம் பிடிக்க மாணவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களை அலைக்கழிக்காமல் பேருந்து ஏற்றி செல்ல வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய நிலையிலும், மாணவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் மனிதாபிமானம் இல்லாத செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநர் முத்துப்பாண்டி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
அதேநேரம் போக்குவரத்துக் கழகம் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!