`நடராஜரை இழிவுபடுத்துகிறது'- யூ டூ புரூட்டஸ் யூடியூப் சேனலை முடக்க கோரும் அர்ஜூன் சம்பத்

`நடராஜரை இழிவுபடுத்துகிறது'- யூ டூ புரூட்டஸ் யூடியூப் சேனலை முடக்க கோரும் அர்ஜூன் சம்பத்

கந்தசஷ்டி, முருகன், சிவபெருமானை தொடர்ந்து நடராஜரை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை பரப்பி வரும் யூ டூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலை முடக்கி சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என தமிழக இந்துமக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில நாட்களாக இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி சிலர் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். கந்தசஷ்டி கவசம், முருகன், சிவபெருமானை தொடர்ந்து தற்பொழுது நடராஜரை இழிவுபடுத்தி கேவலமாக யூ டூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளனர்.

இவ்வாறு தொடர்ந்து இந்து மத கடவுளை இழிவுப்படுத்தும் நோக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடராஜர், சிவ பெருமானின் நடனம் குறித்து மிகவும் ஆபாசமாக பேசி இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சிவராத்திரி நாளன்று கபாலீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு பூஜை செய்தார். அவர்கள் இந்த வீடியோவை பார்த்து யூ டூ புரூட்டஸ் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இத்தகைய செயல்களை அரசு ஊக்குவிக்க கூடாது. சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தசஷ்டி கவசம் மற்றும் இந்து கடவுள் முருகனை அவமதித்ததுபோல தற்போது சிவபெருமானை அவமதிப்பு செய்து வருகின்றனர். தஞ்சாவூர் அப்பர் பூஜை விழாவின்போது 11 பேர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர். சென்னை மருத்துவமனையில் தீவிபத்து என கோடை காலத்தில் தொடர்ந்து தீ விபத்துகள் நடந்து வருகின்றன. எந்த இடத்தில் சிவபெருமான் அவமதிக்கப்படுகிறாரோ, கோயில்கள் இடிக்கப்படுகிறதோ, அந்த இடத்தில் தீங்கு நடக்கும்.

காஞ்சி சங்கரா மடம் பட்டியலின மக்களுக்கு சொந்தமான மடம். தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக இருப்பதற்கு சங்கரா மடமும் ஒரு காரணம். இந்து மதம் எங்கே செல்கிறது என்ற புத்தகத்தை எழுதியவன் அயோக்கியவன். பைபிள் பொய் என்றால் கிறிஸ்து மதம் பொய் ஆகிடும். அதனால் ஒரு நூலை அடிப்படையாக வைத்து இந்து மதம் உருவாகவில்லை. இந்து மதம் எங்கே செல்கிறது என்ற புத்தகம் திராவிட கழகத்தினரிடமும், கிறிஸ்தவரிடமும் பணம் பெற்று எழுதிய நூல்" என ஆவேசமாக கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in