அட்டைப்பெட்டியில் 3,890 போதை மாத்திரை... கடத்தி வந்த ஈரோடு மஞ்சள் வியாபாரி, நைஜீரியர்கள் கைது

மஞ்சள் வியாபாரி, நைஜீரியர்கள் கைது
மஞ்சள் வியாபாரி, நைஜீரியர்கள் கைது

பிரான்ஸ் நாட்டில் இருந்து காலணிகள், போர்வைகள் வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியில் கடத்தப்பட்ட 1.5 கிலோ மதிப்புள்ள 3890 போதை மாத்திரைகளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து நைஜீரியர்கள் இருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

வெளிநாட்டில் இருந்து உயர்ரக போதை பொருட்கள் பார்சல் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு உயர்ரக போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு பார்சல்கள் வரும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், பிரான்ஸ் நாட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக வந்த பார்சலை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது அட்டைப் பெட்டியில் விலை உயர்ந்த ஷூக்கள் மற்றும் போர்வைகள், துணிமணிகள் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அதிகாரிகள் அட்டைப்பெட்டியின் பக்கவாட்டில் சந்தேகம் வராத வகையில் போதை மாத்திரைகளை வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ஒன்றரை கிலோ எடையுள்ள எம்.டி.எம்.ஏ எனப்படும் 3890 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த அதிகாரிகள் பிரான்ஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பார்சல்களின் எடை குறிப்பிடப்பட்டு அதற்கு ஏற்றார் போல் கொரியர் கட்டணம் செலுத்தப்படும். ஆனால் இந்த பார்சலில் உள்ள ஆவணங்களில் இருக்கும் எடையும், அட்டைப் பெட்டியின் எடையும் முரண்பாடாக இருந்ததை வைத்து அதிகாரிகள் இதனை கண்டுபிடித்தனர்.

போதை மாத்திரை
போதை மாத்திரை

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் ஈரோட்டை சேர்ந்த மஞ்சள் வியாபாரி ஸ்ரீனிவாசன் என்பவர் நைஜீரிய நாட்டவர்களுடன் சேர்ந்து தமிழகத்தில் போதை மாத்திரைகளை தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூரு போன்ற பகுதிகளிலும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சீனிவாசன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கிங்ஸ்லி ஒப்னம் மற்றும் அசூகா அலோசியஸ் ஆகிய மூன்று பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஒரு போதை மாத்திரையின் விலை 4000 முதல் 6000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள 3890 மாத்திரைகளை இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே இதேபோன்று வெளிநாட்டில் இருந்து போதை மாத்திரைகளை தமிழகத்திற்குள் கடத்தி விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. போதை மாத்திரை கும்பலின் நெட்வொர்க் குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரவாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் நான்கு நைஜீரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in