
கர்நாடகாவில் மனைவி தன்னை மதிப்பதில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஹாசன் மாவட்டம் சங்கரிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருதத்தா (வயது 43), இவரது மனைவி கல்பனா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இவர்களின் மகள் ஸ்ருதி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். குருதத்தா கடந்த சில வாரங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 12-ம் தேதி மனைவிக்கும் குருதத்தாவுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மனம் நொந்து போன குருதத்தா, வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஹாசன் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் குருதத்தா எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில், “எனது தற்கொலைக்கு மனைவி கல்பனாதான் காரணம். என்னை சரியாக மதிப்பது இல்லை. செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. வீடு வாடகை பணம் வந்தால் உடனே அதை எடுத்து வைத்து கொள்வாள். குடும்ப பொறுப்புகளில் முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியமாக நடந்து வந்தார்.எனக்கு ரொம்ப தொல்லை கொடுத்து வந்தார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று கூறிப்பிட்டுள்ளா்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி கல்பனாவிடம் தொடர்ந்து விசாரணை நடததி வருகின்றனர்.