மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மைவி 3 ஆட்ஸ் முடக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சக்தி ஆனந்தன் என்பவர், மைவி 3 ஆட்ஸ் என்ற தனியார் எம்எல்எம் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு யூடியூப் சேனலும், செயலி ஒன்றும் இயக்கி வந்துள்ளார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் ஈட்டலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், எம்எல்எம் நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்தால் அதற்கேற்ப நிறுவனப் பொருள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்கு தனியாகப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். மேலும், தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினராக உள்ளனர்.
இதனையடுத்து, இந்த யூடியூப் சேனலைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கடந்த ஜனவரி மாதம் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களையும், கோவை புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கூடுமாறு குறுஞ்செய்தி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில், கடந்த ஜன 29-ம் தேதி அந்த பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குவிந்தனர். அப்போது அவர்கள், இந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறினர். மேலும் அவர்கள், இந்த நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாகவும், இதன் மூலம் ஒருவர் கூடப் பாதிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதே சமயம் இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எனப் பலருக்கும் இடையூறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக எம்எல்எம் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது கோவை சிங்காநல்லூர் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தனது நிறுவனம் குறித்து அவதூறு பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவகத்திற்கு நேற்று வந்திருந்தார்.
அனைவரும் தனித் தனியாக மனு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அனைவரும் சேர்ந்து ஒரே மனுவாக தருமாறு போலீஸார் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த சக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு சக்தி ஆனந்தன் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சக்தி ஆனந்தன் உள்ளிட்ட சுமார் 70 பேரை போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் மைவி 3 ஆட்ஸ் தமிழ்நாடு முழுவதும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதை அந்த நிறுவனமே செய்துள்ளதா அல்லது போலீஸார் செய்துள்ளனரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.