நள்ளிரவில் நாய் குரைத்ததால் ஆத்திரம்: குத்திக்கொலை செய்யப்பட்ட வாலிபர்

நள்ளிரவில் நாய் குரைத்ததால் ஆத்திரம்: குத்திக்கொலை செய்யப்பட்ட வாலிபர்
சரண்சிங்

காஞ்சிபுரம் பகுதியில் நள்ளிரவில் நாய் குரைத்ததால் ஆத்திரத்தில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெருவைச் சேர்ந்தவர் சரண்சிங். இவர் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டு கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், வணிகர் வீதியில் அசைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சரண்சிங் வீட்டின் அருகே வசிக்கும், விஷ்ணு என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 11 மணி அளவில் விஷ்ணு, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, சரண்சிங் இல்லாத சமயத்தில் அவரின் குடும்பத்தினரைத் தாக்கியுள்ளார். தகவலறிந்து வீட்டிற்கு வந்த சரண்சிங், விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆவேசமடைந்த விஷ்ணு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சரண்சிங் குடும்பத்தினரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் சரண்சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த சரண்சிங் குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சரண்சிங் உயிரிழந்தார். இதையடுத்து சிவகாஞ்சி காவல்துறையினர் கொலை செய்த விஷ்ணு , அவரின் தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்த விஷ்ணு கஞ்சா போதைக்கு அடிமையானவர் எனவும், முன் பகை காரணமாகத் தனது நண்பர்களுடன் கஞ்சா புகைத்து விட்டு சரண்சிங்கை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததும், முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் விஷ்ணுவின் வளர்ப்பு நாய் குரைப்பதும், அவரின் பாட்டி பாக்கு இடிப்பதும் தொந்தரவாக இருக்கிறது என சரண்சிங் அவர்களிடம் முறையிட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் மீண்டும் பகை ஏற்பட்ட நிலையில் கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in