மகன்களுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற தாய்: நடந்தது என்ன?

மகன்களுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற தாய்: நடந்தது என்ன?

சின்னசேலம் அருகே வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மிரட்டால் தனது 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ஈரியூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அம்சா(30). இவர்களுக்கு ரணீஸ்(11) சபரீஸ்வரன் (9) என்ற மகன்கள் உள்ளனர். ரமேஷ் வீட்டிற்குச் செல்லும் வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸில் அம்சா புகாரளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிலர், அம்சாவுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அம்சா, தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து தனது மகன்களான ரணீஸ், சபரீஸ்வரன் ஆகியோருக்கு அம்சா விஷத்தை கொடுத்தார். இதன் பின் அவரும் விஷத்தைக் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர்கள் மூவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரமேஷ் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கீழ்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அம்சா தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் வழி பிரச்சினையால் தொடர்ந்து சிலரால் பாதிக்கப்படுவதாகவும், இதனால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போலீஸாரும் உதவி செய்யாததால் வாழ்வதை விட சாவதே மேல் என கூறி தனது மகன்களுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக அம்சா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in