
பிறந்து 24 நாளேயான ஆண் குழந்தை வயிற்றில் தூபம் போட்டு பத்திகளை தாய் பொருத்தியதால் அந்த குழந்தை உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ராஜ்கோட்டில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் மூடநம்பிக்கையால் ஒரு குடும்பம் 24 நாட்களேயான ஆண் குழந்தையை இழந்துள்ளது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள ஜெட்பூரில் உள்ள சர்தார்பூர் கிராமத்தில் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. வல்சோயா என்ற இளம்பெண்ணுக்குப் பிறந்த அந்த குழந்தை சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகையைத் தணிப்பதற்காக மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனது தாய் புவாவிடம் வல்சோயா ஆலோசனை கேட்டுள்ளார்.
அதற்கு அவர், குழந்தை அழுகாமல் இருக்க தூபக் குச்சிகளை ஏற்றி வழிபடச் சொல்லியுள்ளார். இதன்படி வல்சோயா தூபக் குச்சிகள், பத்திகளைப் பொருத்தி வழிபாடு நடத்தியுள்ளார். இதனால் குழந்தையின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தையின் உடல் நிலை மோசமடைந்தது.
இதனால் அக்.13-ம் தேதி அந்த குடும்பத்தினர் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வயிற்றில் இருந்த காயங்களைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தீக்காயங்களுக்கு பத்தியால் சுடப்பட்டதே காரணம் என்று அவர்கள் கூறினர். ஆனால், அதை அந்த குழந்தையின் பெற்றோர் ஏற்கவில்லை. மாறாக, சடங்கின் போது ஏற்பட்ட விபத்து தான் இதற்குக் காரணம் என்றனர்.
இந்த நிலையில் ஒரு வார சிகிச்சை பலனின்றி, குழந்தை நேற்று உயிரிழந்தது. மூடநம்பிகையால் பெற்ற குழந்தையை தாய் இழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.