சென்னை அம்பத்தூரில் மகன் கொலைக்கு பழிக்குப் பழியாக வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் (55), என்பவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று மாலை நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த 5 பேர், வீடு புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மேக்ஸ்வெல் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மேக்ஸ்வெலுக்கு மோசஸ் (22), லாரன்ஸ் (23) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். 2022-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (30) என்பவரது கொலை வழக்கில் மோசஸ், லாரன்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
எனவே இதற்கு பழிக்குப்பழியாக மோசஸ், லாரன்ஸ் ஆகியோரின் தந்தையான மேக்ஸ்வெல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, உதயகுமாரின் தாய் லதா (49) மற்றும் அவரது கூட்டாளிகளான கார்த்திக் (24), வினோத் (24), யுவராஜ் (28), நாகராஜ் (62) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தனது மகன் உதயகுமாரின் கொலைக்காக லதா பழிக்குப் பழியாக கொலையை செய்தது தெரியவந்தது.
கொலை செய்ய அந்த கும்பல் வீட்டிற்கு வந்த போது மகன்கள் இருவரும் வீட்டில் இல்லை. எனவே தூங்கிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லை கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.