
திண்டுக்கல் அருகே இரட்டைக் குழந்தைகள் பிறந்த 20வது நாளில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(25). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கௌரி (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. கௌரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதனிடையே குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் இன்று காலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவியை திட்டிவிட்டு சிவக்குமார் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கௌரி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்த நிலையில், கௌரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது அவர் கிணற்றில் சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கௌரியின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்களே ஆன நிலையில் இளம்பெண் உயிரிழந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாய் இறந்த நிலையில், 20 நாட்களை ஆன இரட்டை குழந்தைகள் பாலுக்காக தொடர்ந்து அழுது கொண்டே இருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!