கடன் தொல்லையால் தாய், தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை: சாவதற்கு முன் போனில் பேசியது என்ன?

கடன் தொல்லையால் தாய், தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை: சாவதற்கு முன் போனில் பேசியது என்ன?
கண்ணபிரான்.

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலசாமி(65). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் கேன்டீன் நடத்தி வந்தார். இவரது பானுமதி(55), மகன் கண்ணபிரான்(39).

இந்நிலையில் கண்ணபிரான் சொந்தமாக சாப்ட்வேர் தொழில் செய்து வந்தார். அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கண்ணபிரானுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அவரது மனைவி, குழந்தையுடன் பெங்களூருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் கண்ணபிரான் தனது தாய்,தந்தையுடன் ஓரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் மற்றும் அவரது தந்தை கோபால்சாமி இருவரும் சேர்ந்து வீடு வாங்க 84 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடனைக் கட்ட முடியாமல் சிரமத்திற்குள்ளானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் கடன் சுமை, மறுபுறம் மனைவி, குழந்தை பிரிந்து சென்றதால் கண்ணபிரான் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால், அவர் மற்றும் அவரது பெற்றோர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக தனது நண்பரைத் தொடர்பு கொண்டு, நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம்.எனவே, வீட்டைப் பார்த்து கொள்ளுமாறு கண்ணபிரான் தெரிவித்துள்ளார். இதன் பின் கோபால்சாமி, பானுமதி, கண்ணபிரான் ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கண்ணபிரானின் நண்பர் அளித்த தகவலின் பேரில், அங்கு இன்று சென்ற அரும்பாக்கம் போலீஸார், 3 பேரின் உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in