திருச்சி அருகே எலி பேஸ்ட் சாப்பிட்ட தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 5 வயது பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம், முசிறி துறையூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி காயத்ரி (29). கடந்த 19ம் தேதி வீட்டில் காயத்ரி தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தனது ஐந்து வயது குழந்தை ஜெயஸ்ரீக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள வடபழனி கே.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காயத்ரி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள குழந்தை ஜெயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எலி பேஸ்டை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், தொடரும் இது போன்ற சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி வருகிறது.