`2 பிள்ளைகளைக் கொன்று விட்டேன்’: தாய்க்குத் தகவலைத் தெரிவித்து உயிரை மாய்க்க முயன்ற பெண்!

`2  பிள்ளைகளைக் கொன்று விட்டேன்’: தாய்க்குத் தகவலைத் தெரிவித்து உயிரை மாய்க்க முயன்ற பெண்!

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தனது 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருப்பர்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னடைக்கண் (28). இவர் பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி பஞ்சவர்ணம் (24). இவர்கள் இருவரும் கருப்பர்கோவில்பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஜெகதீசன், 8 மாதத்தில் தக்‌ஷியா என்ற குழந்தைகள் இருந்தனர்.

வீடு கட்டுவது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பொன்னடைக்கணின் குடிப்பழக்கத்தாலும் சச்சரவு நீடித்துள்ளது. இந்நிலையில், ஊர் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு பொன்னடைக்கண் வந்திருந்தார். கருப்புக்குடிப்பட்டியில் உள்ள பஞ்சவர்ணத்தின் தாயார் வீட்டில் பஞ்சவர்ணமும், பொன்னடைக்கண்ணும் குடும்ப பிரச்சினை குறித்து பேசியுள்ளனர். இதன் பின் அவர்கள் இருவரும் கருப்பர்கோவில்பட்டிக்கு வந்தனர்.

இந்த நிலையில், பொன்னடைக்கண் வெளியே சென்ற போது, திடீரென தனது 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து பஞ்சவர்ணம் கொலை செய்தார். இந்த தகவலை தனது தாய்க்கு போனில் கூறியுள்ளார். இதன் பின் அவரும் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சின்னுபிள்ளை உடனடியாக கருப்பர்கோவில்பட்டிக்கு வந்து பார்த்த போது ஜெகதீசனும், தக்‌ஷியாவும் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்து அவர் அழும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறிச்சென்ற பஞ்சவர்ணத்தையும் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல்ரகுமான் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 2 குழந்தைகளையும் கொலை செய்ததாக பஞ்சவர்ணம் கூறினார். உயிரிழந்த 2 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சவர்ணத்தை கைது செய்ததுடன் அவரது கணவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது 2 குழந்தைகளை தாயே கொலை செய்த சம்பவம் பொன்னமராவதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in