
தங்களின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஒரு வயது குழந்தையை வாயில் மதுவை புகட்டி அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறை பகுதியைச் சேர்ந்தவர் சீனு (28). இவரது மனைவி பிரபுஷா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், நட்சன் ராய் (3), அரிஸ்டோ பியூலன் (1) என்ற இரு குழந்தைகள்.
இந்த நிலையில் பிரபுஷாவுக்கும், நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது சதாம் உசேன் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து வந்தனர். இந்த விவகாரம் சீனுவுக்கு தெரிந்ததால் கடந்த 8 மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.
இதில் சீனுவிடம் மூத்த குழந்தை இருந்தது. சீனுவை பிரிந்த பிரபுஷா, முகமது சதாம் உசேனுடன் தூத்துக்குடியில் வாடகை வீட்டில் குடியேறினார். குழந்தை அரிஸ்டோ பியூலனும் அவர்களுடன் தான் இருந்தான். இவர்கள் இருவரும் கடந்த 14-ம் தேதி, குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த மயிலாடி அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலைக்கு வந்தனர். கோழிப்பண்ணை அருகில் உள்ள வீட்டில் இவர்கள் தங்கி இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு திடீரென உடல் நிலை சரியில்லை என கூறி அரிஸ்டோ பியூலனை, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரியவந்தது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததுடன், குழந்தை மீது மது வாடை வீசியதால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஞ்சுகிராமம் போலீஸார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுஷா, முகமது சதாம் உசேன் ஆகியோரை அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கி இருந்த வீட்டிலும் சோதனை நடந்தது.
இதில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை அரிஸ்டோ பியூலனை இருவரும் சேர்ந்து மது கொடுத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தற்போது சீனுவின் தந்தை ராஜ் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் புகாரின் பேரில் முகமது சதாம் உசேன், பிரபுஷா ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பிரபுஷா, முகமது சதாம் உசேன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.