இந்து கடவுள்களுக்கு எதிராக முழக்கம்: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மீது வழக்கு பதிவு!

இந்து கடவுள்களுக்கு எதிராக முழக்கம்: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மீது வழக்கு பதிவு!

மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டை பேரணியில் இந்து மதக்கடவுள்களுக்கு எதிராக பேசியதாக திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 6-க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மதுரை காளவாசல் பகுதியில் 2,500-க்கும் அதிகமானோர் பங்கேற்ற செஞ்சட்டை பேரணி கடந்த 29-ம் தேதி நடைபெற்றது.

ஒற்றை தேசமாக உருவாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் காளவாசல் பைபாஸ் சாலை பகுதியில் தொடங்கி பழங்காநத்தம் பகுதி வரையில் இப்பேரணி நடைபெற்றது.

இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திராவிடர் விடுதலை கழகம் குளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் மற்றும் நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியினர், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.

இந்நிலையில், பேரணியில் இந்து மதக்கடவுள்களுக்கு எதிராக பேசியதாக வீடியோ ஆதாரங்களுடன் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் எஸ்.எஸ். காலணி காவல்நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் திராவிடர் கழகம், விசிக, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 6-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in