பரோலில் வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி; டிஎஸ்பி தலைமையில் 25 காவலர்கள் பாதுகாப்பு... அச்சத்தில் திருச்சி மக்கள்!

போலீஸார் பாதுகாப்புடன் செல்லும் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி (37)
போலீஸார் பாதுகாப்புடன் செல்லும் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி (37)

திருச்சியில் பரோலில் வந்துள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு டிஎஸ்பி தலைமையில் 25 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், தங்கள் பகுதியின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் குருசாமி மற்றும் அதிமுக பிரமுகர் ராஜபாண்டி ஆகியோருக்கிடையே அரசியல் பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியாக கொலைகள் அரங்கேறியுள்ளது. இதில் ராஜபாண்டி உடல் நலக்குறைவால் உயிர் இழக்க, அவரது உறவினரான வெள்ளை காளி என்கிற காளீஸ்வரன் (37) என்பவர் குருசாமியை தீர்த்து கட்டுவது தனது பொறுப்பு என சபதம் போட்டதாக கூறப்படுகிறது. வெள்ளைக்காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி
காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளிBG

இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடர்ந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீஸாரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சென்று இருந்த குருசாமியை சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக வேலூர் மத்திய சிறையில் வெள்ளைக்காளி அடைக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு 15 நாள் பரோல் கிடைத்தது. இதையடுத்து அவர் திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லையில் உள்ள அவரது சகோதரி சத்யஜோதி என்பவரது வீட்டுக்கு 15 நாட்கள் தங்கி செல்ல விருப்பம் தெரிவித்தார்.

சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு
சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு

வெள்ளைக்காளியின் வருகையை முன்னிட்டு கடந்த 25ம் தேதி சத்யஜோதி வீட்டுக்கு முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டு, சுப நிகழ்ச்சி போல் வரவேற்கப்பட்டார். அவரது வருகையால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அங்கு ஒன்று கூடி இருப்பதால், விசேஷம் நடக்கும் வீடு போல் களைகட்டி உள்ளது. இதனிடையே அவரது உயிருக்கு மிரட்டல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், திருச்சி மாவட்ட போலீசார் உஷார் ஆகியுள்ளனர்.

அவர் தங்கி உள்ள இடத்தில் 4 பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர் உட்பட 25 போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான போலீஸார் தங்கள் பகுதியில் குவிந்திருப்பதால், அந்த பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 15 நாட்கள் பரோலில் 3 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 12 நாட்களும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் தொடர்வார்கள் என மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in