வழக்குத் தொடர்ந்தவர் வீட்டின் மீது கற்கள் வீசித் தாக்கிய நிதி நிறுவன ஊழியர்கள்... கரூரில் பரபரப்பு!

வழக்கு தொடர்ந்தவர் வீட்டின் மீது தாக்குதல்
வழக்கு தொடர்ந்தவர் வீட்டின் மீது தாக்குதல்

கரூரில் தனியார் நிதி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தவர் வீட்டின் மீது 10 பேர் கொண்ட கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு காந்திகிராமம் ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் மனோகரன். தனியார் சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு குடும்ப தேவைக்காக வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து 23 லட்சம் ரூபாய் தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார். இதற்காக முறையாக வட்டியும் அசலும் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார்
தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார்

ஆனால் பத்திரத்தை திரும்ப கேட்டு சென்றபோது, மேலும் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நிதி நிறுவன உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் இவரும் இவரது குடும்பத்தினரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வீட்டின் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

கல்வீச்சு தாக்குதலில் கார் சேதம்
கல்வீச்சு தாக்குதலில் கார் சேதம்

ஆனால் கேட்டை திறக்க முடியாததால் அவர்கள் சாலையில் இருந்த செங்கற்கள் மற்றும் கற்களை எடுத்து வீட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மனோகரனுக்கு சொந்தமான கார் மற்றும் வீட்டின் முன் பகுதியில் இருந்து விளக்குகள் உடைந்து சேதம் அடைந்தது. உடனடியாக அவர் இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்வீசித் தாக்கிய கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. குடியிருப்புகள் அதிகம் மிகுந்த பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in