சென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை; காதலிப்பது போல் நடித்து, கொல்ல வியூகம் வகுந்த இளம்பெண் கைது!

ஜூலி
ஜூலி

சென்னையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் அவரை காதலிப்பது போல் நடித்து கொலை செய்ய உதவிய  மிசோரம் மாநில மாடல் அழகி  கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை புழல் காவாங்கரை 15-வது தெருவை சேர்ந்தவர் ரவுடி சத்யா ( 24). இவர் கடந்த 10-ம் தேதி இரவு எழும்பூரில்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய எழும்பூர் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் அதிரடி விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர்களை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஜூலி என்று மாடல் அழகி ஒருவரும், அவரது காதலன் கிஷோர் என்பவர் உள்பட மேலும் 5 பேர்களை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். பழிக்கு பழி வாங்க இந்த கொலை நடத்தப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை பேசின் பிரிட்ஜில் சிவராஜ் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப் பழி வாங்க அவரது கூட்டாளிகள் சபதம் போட்டு செயல்பட்டனர். அதில்  வக்கீல் அகிலன்,  நாய் ரமேஷ் ஆகியோரை கொலை செய்த இந்த கும்பல் மூன்றாவதாக ரவுடி சத்யாவை தீர்த்து கட்ட காத்திருந்தனர். சத்யாவை தீர்த்து கட்டுவதற்கு காதல் வியூகம் ஒன்றை அமைத்தனர்.

அந்த காதல் வியூகத்தில் மிசோராம் மாநிலத்தை சேர்ந்த அழகி ஜூலி என்பவர் பயன்படுத்தப்பட்டுள்ளார். ஜூலி சத்யாவின் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இன்ஸ்டாகிராமிலும் சத்யாவோடு தகவல் பரிமாறி உள்ளார். சத்யாவை உயிருக்கு உயிராக காதலிப்பது போல் நடித்து உள்ளார். சத்யாவும் அதை உண்மை என்று நம்பி உள்ளார்.  கடந்த 8-ம் தேதி சிவராஜ் நினைவு தினமாகும். 

அன்றைய தினம் சத்யாவிடம் ஜூலி செல்போனில் பேசி  எழும்பூருக்கு வர சொல்லியிருக்கிறார். அதை ஏற்று கடந்த 10-ம் தேதி இரவு ஜூலியை முதன் முதலாக நேரில் பார்ப்பதற்காக சத்யா எழும்பூர் வந்தார். அப்போது அவரை தீர்த்துக் கட்டிவிட்டனர். காதலிப்பது போல் நயவஞ்சக நாடகம் ஆடி சத்யாவை தீர்த்துக் கட்டுவதற்கு மூளையாக செயல்பட்ட ஜூலி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காதலன் கிஷோர் உள்பட மேலும் 4 பேரும் கைதாகி உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in