`படத்தில் இருப்பவரைத் தெரியுமா?'‍ தெரியாது என்று சொன்னவருக்கு கூலிப்படையினரால் நேர்ந்த துயரம்!

`படத்தில் இருப்பவரைத் தெரியுமா?'‍ தெரியாது என்று சொன்னவருக்கு கூலிப்படையினரால் நேர்ந்த துயரம்!
கூலிப்படை

சென்னையில், புகைப்படம் ஒன்றை காட்டி ‘இவரைத் தெரியுமா?’ எனப் பொதுமக்களிடம் மர்மநபர்கள் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். ‘தெரியாது’ எனச் சொன்னவரைப் பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தலைமறைவானது அந்த மர்ம கும்பல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில்தான் வளர்ச்சி என்பது இருக்கும். இந்த ஆட்சியில் வன்முறைகள், சாதிச் சண்டைகள், மத மோதல்கள், துப்பாக்கிச் சூடு, அராஜகம் என எதுவும் இல்லை. கூலிப்படையைக் கொண்டு கொலை செய்த வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து, கூலிப்படைக்கே முற்றுப் புள்ளி வையுங்கள். கூலிப்படைகளைத் தொழிலாக வைத்திருப்பவர்கள் முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும்” என காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்தார். ஆனால் சென்னையில் குற்றங்களும், கூலிப் படையினரும் குறைந்தபாடில்லை என்று சொல்லும் அளவிற்கு தினந்தினம் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் அதிர்வலையைக் கிளப்பி வருகின்றன. பாஜக பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல், நகை பறிப்பு எனப் பல சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில் சென்னை, சேலையூரில் புகைப்படத்துடன் உலா வந்த மர்ம கும்பல் ஒன்று அப்பகுதி மக்களைப் பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது. சேலையூர் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. வழக்கம் போல வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 6 இருசக்கர வாகனங்கள் அங்கும் இங்கும் அப்பகுதியில் நோட்டமிட்டுச் சுற்றித் திரிந்தன. மேலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 12 மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்த படத்தில் இருப்பவரை உங்களுக்குத் தெரியுமா எனக் கேட்டிருக்கிறார்கள். இதற்கு கிருஷ்ணமூர்த்தி தெரியாது எனப் பதில் அளித்துள்ளார். கஞ்சா போதையிலிருந்த அந்த கும்பல் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி இருக்கிறது. மேலும் அப்பகுதியிலிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து தெறித்து ஓடியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in