அதிர்ச்சி... மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம்; ஆம்புலன்ஸ் பணியாளர் கைது!

மருத்துவ பணியாளர் பாலமுருகன்
மருத்துவ பணியாளர் பாலமுருகன்

சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட மனநலம் பாதித்த பெண்ணை மருத்துவமனை கழிப்பறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 108 ஆம்புலன்ஸ் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கடந்த 18-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தாயார் 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார். உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரது தாயும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

108 ஆம்புலன்ஸில் பணியாற்றிய மருத்துவ உதவியாளரான பாலமுருகன், மனநலம் பாதித்த பெண்ணையும், அவரது தாயையும் ஆம்புலன்ஸில் இருந்து மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளார். காலை நேரம் என்பதால் சிகிச்சை பிரிவில் உள்ள பணியாளர்கள் பணிக்கு வந்திருக்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் தாயை அங்கேயே இருக்க கூறிய பாலமுருகன், பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் பதிவு செய்துவிட்டு வருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம் சம்பவம் நிகழ்ந்த இடம்
பாலியல் பலாத்காரம் சம்பவம் நிகழ்ந்த இடம்

இந்நிலையில் பணிக்கு வந்த மருத்துவமனை பணியாளர், அங்கு அமர்ந்திருந்த பெண்ணின் தாயாரிடம் விசாரித்துள்ளார், அவரிடம், தனது மகளை ஆம்புலன்ஸ் பணியாளர் அழைத்து சென்றதை கூறியுள்ளார். சுமார் 1 மணி நேரத்திற்கு பின் அந்த பெண் மட்டும் சிகிச்சை பெற வந்துள்ளார். அவரிடம் எங்கு சென்றாய் என கேட்ட போது அவரால் நடந்ததை கூற இயலவில்லை.

இதன் பின் மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தனர். இதன் பின் அவர் எங்கு கூட்டி செல்லப்பட்டார் என கேட்ட போது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறையை அப்பெண் காட்டியுள்ளார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகாரைப் போலீஸார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி காவல்துறை உயர் அதிகாரியின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், நேற்று நள்ளிரவு முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்த மருத்துவபணியாளர் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 108 ஆம்புலன் பணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், அதனை போலீஸார் மறைக்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in