பப்ஜி விளையாட்டு மோகம்: பெற்றோரை அடித்துக் கொன்ற இளைஞர்!

அங்கித், லட்சுமி பிரசாத், விமலா
அங்கித், லட்சுமி பிரசாத், விமலா

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 28 வயது இளைஞர் ஒருவர் தனது பெற்றோரைக் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள நவாபாத் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசாத் (60). அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விமலா (55). இந்த தம்பதிக்கு அங்கித் என்ற 28 வயது மகன் உள்ளார். ஆகஸ்டு 5ம் தேதி காலை வழக்கம் போல் பால் வியாபாரி வீட்டின் காலிங்பெல்லை அடித்துள்ளார். ஆனால், வீட்டின் கதவு திறக்கப்படாததோடு, வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால், என்னவோ, ஏதோ என்று நினைத்த அவர், உடனடியாக கதவை தட்ட முயற்சித்துள்ளார். கதவு உள்ளே தழிடப்படாமல் திறந்தே இருந்துள்ளது. ஏதோ விபரீதம் நடந்திருப்பதை புரிந்து கொண்ட அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு லட்சுமி பிரசாத் மற்றும் விமலா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பெற்றோரை கொலை செய்த குற்றத்திற்காக அங்கித்தையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கித் தனது பெற்றோரை லத்தி போன்ற மரக்கட்டையால் அடித்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இந்த சம்பவத்தால் மனமுடைந்துள்ள லட்சுமி பிரசாத்தின் உறவினர்கள், அங்கித் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி மனம் குழம்பியே இந்த விபரீதத்தை அரங்கேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு பப்ஜி விளையாட்டு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை மகனே அடித்து கொன்ற கொடூர சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in