அரசியலாக்கப்படுகிறதா மேலூர் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்?

அரசியலாக்கப்படுகிறதா மேலூர் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்?

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் மதமாற்றப் பிரச்சினையாக்கப்பட்டதைப் போலவே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மேலூர் மாணவி விவகாரமும் அரசியலாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த மாதம் மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோது, வழக்கு கூட பதிவு செய்யாமல் போலீஸார் மெத்தனமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், காணாமல் போன மாணவியும், தும்பைப் பட்டியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற 29 வயது இளைஞரும் காதலித்துவந்ததாக தெரியவந்தது. மாணவி மாயமானதைப் போலவே, அந்த வாலிபரையும் ஊரில் பார்க்க முடியாததால் அவர்தான் கடத்திச் சென்றிருக்கலாம் என்று போலீஸாரிடமும், அந்த வாலிபரின் தாயாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்த வாலிபர் அந்த மாணவியை தன்னுடைய தாயார் மதினா பேகம் வாயிலாக, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார். அரை மயக்க நிலையில் இருந்த அந்த மாணவியை, பெற்றோர் மேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது உடல்நிலை மேலும் மோசமானதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அப்போது அந்த மாணவி விஷமருந்தியதும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுமே அவரது உடல் நலிவுக்குக் காரணம் என்று தெரியவந்தது.

இவ்வளவு பிரச்சினைக்கு நடுவில் நேற்று அந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் நாகூர் ஹனிபாவை கைது செய்தனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. "நானும் அந்தச் சிறுமியும் காதலித்துவந்தோம். சம்பவத்தன்று அவளை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி எனது நண்பன் பெருமாள் கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்குக் அழைத்துச் சென்றேன்.

இதற்கிடையே எனது தாயார் என்னைத் தொடர்பு கொண்டு, நீ தான் அந்த மாணவியை கடத்திச் சென்றுவிட்டதாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் போலத் தெரிகிறது. தயவு செய்து அந்தப் பெண்ணை ஊருக்கு கொண்டுவந்துவிட்டுவிடு என்று கெஞ்சினார். எனக்கு பயம் வந்துவிட்டது. அந்த மாணவி உயிருடன் ஊருக்கு வந்தால், என்னைப் பற்றிய எல்லா விவரமும் வெளிவந்துவிடும் என்பதால், இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று அவளிடம் பேசினேன். அவளும் ஒப்புக்கொண்டாள். உடனே எலி மருந்து கலந்த உணவை அவளைச் சாப்பிட வைத்தேன். ஆனால், நான் சாப்பிடவில்லை. அவளது உடல்நிலை மோசமானதால், எனக்குப் பயம் வந்துவிட்டது. அவளை என் தாயார் மூலம் அவளது குடும்பத்திலேயே ஒப்படைக்கச் செய்தேன்" என்று வாக்குமூலம் கொடுத்தார் அந்த வாலிபர்.

இதைத் தொடர்ந்து நாகூர் ஹனிபா மீதான வழக்கை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்த போலீஸார், அவரையும் அவரது நண்பர்களான மதுரை திருநகரைச் சேர்ந்த பிரகாஷ், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தாப்பா சாகுல் ஹமீது உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இஸ்லாமிய இளைஞர் ஒருவர் காதல் என்ற பெயரில் இந்து மாணவியை சீரழித்து, அவளது மரணத்துக்கு காரணமானதால் இந்தப் பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருக்கிறது. இதனால் இதுவும் இப்போது அரசியல் பிரச்சினையாக மாறியிருக்கிறது. அந்தப் பெண்ணின் பெற்றோரை பாஜகவினர் சந்தித்துப் பேசியதும், நியாயம் கோரி பெண்ணின் உறவினர்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவருவதும் இப்பிரச்சினையை தீவிரப்படுத்தியிருக்கிறது. தஞ்சை மாணவி விவகாரம் போல, இதுவும் மாநில அளவிலான முக்கிய பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இன்னொரு புறம், போக்சோ சட்டத்தின் கீழ் நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், அந்த வழக்குகளை விரைவாக விசாரிப்பதில்லை என்றும், புலன் விசாரணை முடிந்து வழக்கு நீதிமன்றம் சென்றாலும் சில வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போக்சோ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in