மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை; பொறியியல் மாணவர் கைது

தற்கொலைக்குத் தூண்டியது உட்பட 3 பிரிவுகளில் வழக்கு
மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை; பொறியியல் மாணவர் கைது
கைது செய்யப்பட்ட விக்னேஷ்

மாங்காட்டில் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் மாணவி 3 கடிதங்களை எழுதி வைத்திருந்த நிலையில், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து 3 தனிப்படை போலீஸார் 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், தோழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த விசாரணை நடந்தது.

இதில் மாங்காட்டைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான விக்னேஷ் என்பவர், மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. மேலும் அவரது வாட்ஸ்அப்பில் இருந்தும் மாணவிக்கு ஆபாசமாக பதிவிட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ, பெண் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாணவி தற்கொலை தொடர்பாக முதல்கட்டமாக கல்லூரி மாணவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியிடம் அடிக்கடி பேசிய நபர்களின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதை வைத்து மாணவிக்கு தொல்லை கொடுத்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தனிப்படையினர் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தகட்டமாக இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் ‘பள்ளி பாதுகாப்பானதாக இல்லை. ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம்’ என்று குறிப்பிட்டு இருப்பதால், உறவினர்கள், ஆசிரியர் தரப்பில் ஏதாவது பாலியல் துன்புறுத்தல் இருந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in