நடுவானில் தற்கொலை முயற்சி... விமானத்தின் கதவை திறக்க முயன்றவருக்கு மனநிலை பாதிப்பா?!

நடுவானில் தற்கொலை முயற்சி... விமானத்தின் கதவை திறக்க முயன்றவருக்கு மனநிலை பாதிப்பா?!

ஐதராபாத்தில் இருந்து கவுஹாத்தி சென்ற விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற நபருக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் கதவை திறக்க முயற்சித்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கவுஹாத்தி நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கவுஹாத்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த போது 41 வயது நபர் திடீரென அவசர காலக் கதவை திறக்க முயற்சித்துள்ளார். அப்போது விமான பணியாளர்கள் அந்த நபரை பிடித்து இழுத்து மீண்டும் அமர வைக்க முயற்சித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தில் பயணித்த பயணிகளும், விமான பணியாளர்களுடன் இணைந்து அந்த நபரை அடித்து உதைத்து விமானத்திற்கு உள்ளேயே அமர வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கிய பிறகு பாதுகாப்புப்படையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் கிழக்கு அகர்தலா பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிஸ்வஜித் தேப்நாத் என்பது தெரிய வந்தது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக விமான பணியாளர்கள் சந்திரிமா சக்கரபர்த்தி மற்றும் மணிஷ் ஜிண்டால் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மூவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிஸ்வஜித்திற்கு மனநல பாதிப்பு இருந்ததும், தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அவர் விமான கதவை திறக்க முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருப்பதாக விமான பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக விமான பயணத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்து சர்ச்சைகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in