
கர்நாடகா தலைமைச் செயலக பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் மோகன் குமார்(53). இவர் கர்நாடக தலைமைச் செயலகம் செயல்படும் விதான சவுதா கட்டிடத்தின் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளதாக பல பெண்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன் முதல் பிரிவு உதவியாளர் மற்றும் இரண்டாம் பிரிவு உதவியாளர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல பெண்களிடம் அவர் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 15-ம் தேதி கிரிஜா என்ற பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக மோகன் குமார் கூறிள்ளார். அத்துடன் விதான சவுதாவிற்கு சான்றிதழ்களுடன் அவரை வரவழைத்து சரிபார்த்துள்ளார். இதன்பின் வேலை வாங்கித் தருவதாக 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். முதல் தவணையாக 2.50 லட்ச ரூபாயை கிரிஜாவிடம் பெற்ற மோகன்குமார், பணி நியமனக் கடிதம் கிடைத்ததும் மீதமுள்ள 7.5 லட்ச ரூபாயைக் கொடுக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது. கிரிஜாவுக்கு ஆகஸ்ட் மாதம் பணி நியமன ஆணை கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
ஆனால், கிரிஜாவுக்கு பணி நியமன ஆணை வரவில்லை. இது தொடர்பாக அவர் மோகன்குமாரை போனில் தொடர்பு கொண்ட போது அவர் எண்ணை மாற்றியது தெரிய வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை கிரிஜா உணர்ந்தார்.
இதுதொடர்பாக விதான சவுதா காவல்நிலையத்தில் கிரிஜா புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விமான நிலையத்தில் வைத்து மோகன்குமாரை நேற்று கைது செய்தனர். அவர் எத்தனை பெண்களிடம் பணமோசடி செய்துள்ளார் என்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமைச் செயலக பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில் பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.