
ஜார்க்கண்ட்டில் 22,000 ரூபாய் திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், சிக்னி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்ஷாத் அன்சாரி(50). இவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 22,000 ரூபாய் திருடி விட்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த ஒரு கும்பல், அன்சாரியை தேடிப்பிடித்து கொடூரமாக தாக்கியது. இதில் அன்சாரி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறிதது ராஜ்ரப்பா கோயில் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அன்சாரியை அடித்துக் கொன்றதாக புரான் மஹ்தோ, புவனேஷ்வர் மஹ்தோ, ஹிராலால் மஹ்தோ, பாலேஸ்வர் மஹ்தோ மற்றும் அரவிந்த் மஹ்தோ ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பியூஷ் பாண்டே கூறினார். மேலும், சிக்னி கிராமத்தில் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 22,000 ரூபாய் திருடி விட்டதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராம்கர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.