
20 நாள் சம்பளத்தை தராமல் அலைக்கழிப்பதாக கூறி, தொழிலாளி ஒருவர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை ஊழியர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டில் ஒன்றில் இருந்து டீசலை உடல் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த, தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவர், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தியதோடு, போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீஸார், அந்த நபரை ஆட்சியர் அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று, உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ரவிச்சந்திரன் என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கடந்த மாதம் திருப்பூருக்கு வந்த ரவிச்சந்திரன், அங்கு ஒரு மில்லில் 20 நாட்கள் பணியாற்றியுள்ளார். தீபாவளியை ஒட்டி, சொந்த ஊருக்குச் செல்ல ஊதியத்தை கேட்ட போது, மில் நிர்வாகம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவசர எண் 100க்கு அழைத்து, புகாரளித்த போதும் நடவடிக்கை இல்லை என்பதால் விரக்தியில் இருந்த ரவிச்சந்திரன், இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்று அறிவுறுத்திய போலீஸார், விசாரணை நடத்துவதற்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர்.
இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.