அதிர்ச்சி! காதலால் காவல்நிலையம் சென்ற மகன்; வீட்டில் தந்தை மர்ம மரணம்

வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கட்டிட தொழிலாளி
வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கட்டிட தொழிலாளி

கோவையில் மகன், காதல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் சென்றிருந்த நிலையில், தந்தை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). கட்டிட தொழிலாளியான இவருக்கு, ரதிதேவி என்ற மனைவியும், ஹரிஹரன், பிரதீப் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். தனியார் கல்லூரியில் பயின்று வரும் ஹரிஹரனுக்கும், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து, பெண்ணின் தந்தை சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக காவல் நிலையம் செல்ல அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்த நிலையில், குடிபோதையில் நாகராஜ், வீட்டின் அருகேயுள்ள கோயில் அருகில் விழுந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அங்கு சென்று, நாகராஜை மீட்டு, வீட்டில் கொண்டு வந்து படுக்க வைத்துவிட்டு, காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர். இரவு 8 மணியளவில் மூவரும் வீடு திரும்பிய போது, அங்கு நாகராஜ், மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் போலீஸார், நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போத்தனூர் காவல் நிலையம்
போத்தனூர் காவல் நிலையம்

இதனிடையே, நாகராஜின் வீடு அருகே வசித்து வந்த ரதிதேவியின் சகோதரரும், நாகராஜின் மைத்துனருமான சந்திரன் (40) மாயமாகி உள்ளது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், சந்திரன் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் நாகராஜ் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவான சந்திரனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in