கோவையில் வெளுத்து வாங்கிய மழை; முதியவர் உயிரிழப்பு: சாயக்கழிவுகளால் ஆறு பாழ்!

கோவையில் பெய்த கனமழை.
கோவையில் பெய்த கனமழை.

கோவையில் நேற்று இரவு பெய்த கன மழையின் போது சாயக் கழிவுகள் ஆற்றில் கலந்து விடப்பட்டதால் ஆற்றில் நுரை ததும்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் அதனையொட்டி உள்ள குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதிலும் கடுமையான வெப்பம் நிலவியது. இரவில் திடீரென பெய்யத் தொடங்கிய மழை, சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது.

கனமழையால் வெள்ளக்காடான சாலைகள்
கனமழையால் வெள்ளக்காடான சாலைகள்

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில மழைநீர் வெள்ளமாக வழிந்தோடியது. கருமத்தம்பட்டி பகுதியில் பெய்த மழை காரணமாக சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதே போல் கோவை மாநகர பகுதிகளிலும் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் லங்கா கார்னர் மற்றும் அவிநாசி மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரை மோட்டார்கள் கொண்டு அகற்றியதால் போக்குவரத்து சீரானது.

சாயப்பட்டறை கழிவுநீரால் நுரை பொங்கி கட்சியளிக்கும் நொய்யல் ஆறு
சாயப்பட்டறை கழிவுநீரால் நுரை பொங்கி கட்சியளிக்கும் நொய்யல் ஆறு

இதனிடையே இரவு பெய்த பலத்த மழையின் போது, மழை நீருடன் சாயப்பட்டறை கழிவுகளையும், நொய்யல் ஆற்றில் சிலர் கலந்து விட்டுள்ளனர். இதனால் ஆத்துப்பாலம், சுண்ணாம்பு காலவாய் பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் நுரை பெருக்கெடுத்துள்ளது.

பல மீட்டர் தொலைவிற்கு வெண்ணிறத்தில் நுரை தேங்கி இருப்பதை பொதுமக்கள் கவலையுடன் பார்த்து செல்கின்றனர். இன்று காலை 8:00 மணி வரையிலான மழை அளவினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் கோவை பீளமேடு பகுதியில் 6.1 செ.மீ மழையும், கோவை தெற்கு பகுதியில் 5.6 செ.மீ மழையும், தொண்டாமுத்தூர் பகுதியில் 5.9 செ.மீ., மழையும், வேளாண் பல்கலைப் பகுதியில் 5.2 செ.மீ., மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்கிய மழைநீரில் மூழ்கி ஆதரவற்ற மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
தேங்கிய மழைநீரில் மூழ்கி ஆதரவற்ற மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

இதனிடையே நேற்று இரவு லங்கா கார்னர் பகுதியில் சாலையில் தங்கி இருந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி ஒருவர், மழையின் போது பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுள்ள போலீஸார், அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in