
கேரளாவின் கொச்சியில் உள்ள பிரபல வணிக வளாகமான லூலூ மாலில் பர்தா அணிந்த 23 வயது ஆண் ஐடி பொறியாளர் ஒருவர், பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து மொபைல் போனில் படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சியின் இன்ஃபோபார்க்கில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவர் அபிமன்யு. இவர் பர்தா அணிந்துகொண்டு லூலூ மாலில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்துள்ளார். அங்கே அவர் தனது தொலைபேசியை ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் வைத்து, கேமராவில் காட்சிகளை பதிவு செய்ய ஒரு துளையினைப் போட்டு, அதை கழிப்பறையின் வாசலில் மாட்டினார்.
கேமராவை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்து வாஷ்ரூம் அருகே அவர் உலாவிக்கொண்டிருந்தபோது, அவரது சந்தேகத்திற்குரிய நடத்தையை வணிக வளாகத்தின் பாதுகாப்புப் பணியாளர்கள் கவனித்தனர். இது தொடர்பாக உடனடியாக அவர்கள் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் பெண் வேடமிட்டு, கழிவறையில் மொபைல் போனில் பெண்களை படம்பிடித்தது தெரியவந்தது.
அந்த நபர் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாக கொச்சி களமசேரி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தார். இதையடுத்து, அபிமன்யுவின் பர்தா மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் இதுபோன்ற செயல்களை வேறு எங்கும் செய்திருக்கிறாரா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.