போலீஸிடம் கற்றுக் கொண்டான்... 10 நிமிடத்தில் வேலையை முடித்துவிடுவான்: சிக்கிய கில்லாடி கொள்ளையன்

போலீஸிடம் கற்றுக் கொண்டான்... 10 நிமிடத்தில் வேலையை முடித்துவிடுவான்: சிக்கிய கில்லாடி கொள்ளையன்
பிடிபட்ட கொள்ளையர்கள்

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸாக காவல் துறையில் பணிபுரிந்து கொள்ளையடிக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டு அதனைப் பயன்படுத்தி கொள்ளையனாக மாறிய வேலூர் மணிகண்டன் மதுரை மாவட்ட காவல்துறையினரிடம் சிக்கி உள்ளான்.

கடந்த இரு மாதங்களாக மதுரை மாவட்டம் கருப்பாயூரணி, ஒத்தக்கடை, உத்தங்குடி, மேலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள ஆட்கள் இல்லாத வீடுகளை உடைத்து நகை, பணத்தினை கொள்ளை அடித்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கொள்ளையர்களை கைது செய்வதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில், கருப்பாயூரணி மற்றும் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா மற்றும் நெல்லை மாவட்டத்தில் பதிவாகியிருந்த கொள்ளை சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது பிரபல கொள்ளையனான வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகளான தமிழ்குமரன் மற்றும் லோகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்
செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்

இதனையடுத்து கொள்ளையா்களை கைது செய்ய தேடுதலில் ஈடுபட்ட தனிப்படையினர் வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளியான தமிழ்குமரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 77 பவுன் தங்க நகைகள், கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மதுரையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் மணிகண்டன் வேலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளான். அதில், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸாக காவல் துறையில் பணிபுரிந்துள்ளான். அப்போது, காவல் துறையினருடன் பழகி பல்வேறு கொள்ளையர்களின் கொள்ளையடிக்கும் முறைகளை கற்றுக்கொண்டு அதனை பயன்படுத்தி வேலையை விட்டுவிட்டு கொள்ளையனாக மாறி இருவரை கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.

தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணித்து பூட்டுகளை உடைத்து 10 நிமிடங்களில் கொள்ளை சம்பவத்தை நடத்தி முடிக்கும் அளவிற்கு கைதேர்ந்த கொள்ளையனாக மாறியுள்ளான். பிரபல கொள்ளையனான மணிகண்டன் மீது இரு கொலை வழக்கு உள்ளிட்ட 100 கொள்ளை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூர் மணிகண்டனை கைது செய்த தனிப்படையினரை காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பாராட்டினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், ”பிரபல கொள்ளையன் வேலூர் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான லோகேஷ் என்பவனை தனிப்படையினர் தேடிவருகின்றனர். மணிகண்டனின் ஏனைய வழக்குகளில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி, கொள்ளையர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக வழக்கை விரைவாக விசாரித்து உரிய தண்டனை பெற்றுதருவோம்" என்றார்.

மேலும், "அதிக நகைகளை பயன்படுத்துபவர்கள் வங்கி லாக்கர்களை பயன்படுத்த வேண்டும். புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் கஞ்சா, போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 32 பேர் குண்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in