மதுரை ரவுடி வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்ற முடியாது!

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை  ரவுடி வெள்ளைக்காளியை 
திண்டுக்கல் சிறைக்கு மாற்ற முடியாது!

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த ரவுடி வெள்ளைக்காளி (எ) காளிமுத்து. இவரது மனைவி திவ்யா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் சகோதரர் சின்னமுனுசு கடந்த 2004-ல் திமுகவை சேர்ந்த வி.கே.குருசாமி ஆட்களால் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி இரு குடும்பங்களுக்கிடையே நடந்த மோதல்கள் தொடர்பாக மதுரை காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் பல வழக்குகளில் உள்ள என் கணவர் வெள்ளைக்காளியை 2016-ல் போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரது இடது கால் முட்டியை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர். இதன் பின் அவர் ஜாமீனில் வந்தார். 2020-ல் குற்றாலத்தில் மீண்டும் என் கணவரை கைது செய்தனர். அப்போது வலதுகால் கணுக்காலை அடித்து உடைத்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருச்சி சிறையில் என் கணவர் உள்ளார்.

அவரால் நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இருப்பினும் வழக்கு விசாரணைக்காக அவரை மதுரையைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களுக்கு போலீஸார் அடிக்கடி அழைத்து வருகின்றனர். என் கணவரை, ஒன்றரை வயது மகளுடன் திருச்சி சிறைக்கு நேரில் சென்றும், மதுரை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும்போதும் நேரில் சென்று சந்திப்பதிலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறேன். எனவே, வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "வெள்ளைக்காளி மீது 8 கொலை வழக்குகளும், கஞ்சா வழக்குகளும் உள்ளன. திண்டுக்கல் சிறையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று திவ்யாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in