பரபரப்பு; எஸ்.ஐயை வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையன்: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்!

போலீஸார் சுட்டதில்  காயமடைந்த ஸ்டீபன் ராஜ்
போலீஸார் சுட்டதில் காயமடைந்த ஸ்டீபன் ராஜ்

மதுரையில் செயின் வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ய சென்றபோது, போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார். இதனால் அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் கடந்த 4-ம் தேதி லதா(44) என்ற பெண் இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்தனர். அப்போது லதா இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டதில் படுகாயம் அடைந்தார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நாகராஜன் (48) என்பவரை இன்று கைது செய்தனர்.

செயின் பறிப்பு குற்றவாளி ஸ்டீபன் ராஜ் வெட்டியதில் படுகாயமடைந்த சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார்
செயின் பறிப்பு குற்றவாளி ஸ்டீபன் ராஜ் வெட்டியதில் படுகாயமடைந்த சார்பு ஆய்வாளர் ரஞ்சித்குமார்

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான ஸ்டீபன் ராஜ் (21) என்பவர் மதுரை செல்லூர் களத்துப்பொட்டில் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித் குமார், ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் ஸ்டீபன் ராஜை கைது செய்ய சென்றனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஸ்டீபன் ராஜ், ரஞ்சித் குமாரை அரிவாளால் கையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து ஆய்வாளர் ஆறுமுகம், ஸ்டீபன் ராஜை காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஸ்டீபன் ராஜை போலீஸார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சார்பு ஆய்வாளர் ரஞ்சித் குமார் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, ஸ்டீபன் ராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால், தற்காப்பிற்காக முழங்காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in